- Details
-
Hits: 340
வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்நகரை மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்றெல்லாம் வேறுபெயர்கொண்டு அழைப்பார்கள். தென்னிந்தியாவில் அமைந்துள்ள இந்நகர் சென்னையை அடுத்துள்ள பெரிய நகராகும். மதுரையானது புராண காலத்திலிருந்தே சிறப்பு பெற்றதாக அறியப்படுகிறது. அந்தவகையில் மீனாட்சியம்மன் கோவில் மிகச்சிறப்பானது. மேலும் சிலப்பதிகாரத்திலும் கண்ணகி மதுரையை எரித்தாள் என கூறப்படுகிறது. இவ்வாறான சிறப்புக்கள் வாய்ந்த நகரே மதுரை மாநகர் ஆகும். மேலும் கோவில்கள் நிறையப்பெற்ற நகராகவும் இந்நகரே காணப்படுகிறது. பாண்டியரது ஆட்சிக்காலத்திலும், நாயக்கரது ஆட்சிக்காலத்திலும் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் பல்வேறுபட்ட மாற்றங்களுக்குட்பட்ட மதுரை நகரானது வரலாற்றில் மிக முக்கிய இடத்தை பெறுகிறது.
மதுரை மாநகரின் மீனாட்சியம்மன் கோயிலானது உலகப்பிரசித்தி பெற்ற ஒரு ஆலயமாகும்.இறைவன் திருவாலவாயர், இறைவி மீனாட்சி, தலமரம் அரசமரம், தீர்த்தம் சிவதீர்த்தம், புராணபெயர் ஆலவாய். இது தவிர மதுரையென்றாலே மல்லிகை எனுமளவிற்கு மதுரையின் மல்லிகைப்பூவும் உலகளவில் பிரசித்திபெற்ற ஒன்றாகும் என்பது நிதர்சனம். சங்கம் வைத்து தமிழ் வளர்க்கப்பட்ட இடங்களில் இம்மதுரையம்பதியும் ஒன்று என்பது அதன் தொல்சிறப்பை பறைசாற்றுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில் வரலாற்றை நோக்குமிடத்து முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்யு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள் சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனைக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது.
மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாக தன் வாலை வாயினால் கவ்விக் கொண்டு இத்தலத்தின் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது என்று ஒரு வரலாறு கூறுகிறது.விருத்தாசுரன் என்ற அசுரனை வென்ற தேவேந்திரன், தனது பிரம்மகத்தி தோஷம் நீங்க கடம்பவனத்தில் இருந்த இந்த சிவலிங்கத்தை பூசித்து தனது தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் ஒரு வரலாறு கூறுகிறது. இவ்வாறாக இக்கோவிலின் வரலாறு அமைகிறது. மதுரையை அண்மித்த கோயில்களாக திருஆலவாய் , திருஆப்பனூர், திருப்பரங்குன்றம், திருவேடகம்,திருப்பூவணம், திருச்சுழியல்,திருகொடுங்குன்றம் ( பிரான்மலை),திருப்புத்தூர்,திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
திருவாடானை,வெஞ்சமாக்கூடல்,திருப்புனவாயில்,திருவாட்போக்கி (ரத்னகிரி),கருவூர் (கரூர்),கற்குடி (உய்யக் கொண்டான் மலை )
திருப்பராய்த்துறை,திருமூக்கிச்சரம் (உறையூர்),திருகடம்பந்துறை, திருச்சிராப்பள்ளி,திருவெறும்பூர் என்பவை கூறப்படுகின்றன.
இங்கு நடைபெரும் திருவிழாக்கள் பற்றிநோக்குமிடத்து வைகாசி வைகாசி மாதம் கோடை வசந்தத் திருவிழா. திருவாதிரை நக்ஷத்திரத்திலே இருந்து பத்து நாட்கள் எண்ணெய்க்காப்பு நடக்கிறது.ஆனி ஆனி மாதம் மகம் நட்சத்திரத்திலிருந்து ஊஞ்சல் உற்சவம். தினமும் மாலை ஆறு மணியிலே இருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நூறு கால் மண்டபத்திலே ஒரே ஊஞ்சலில் சுந்தரேஸ்வரரோடு மீனாட்சி அமர்ந்து ஊஞ்சல் ஆட, கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள், மாணிக்க வாசகரின் பொன்னூஞ்சல் பாடல்களைப் பாட ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.ஆடி ஆடி மாதத்தில் ஆயில்ய நக்ஷத்திரம் துவங்கி பத்து நாளைக்கு முளைக்கொட்டு உற்சவம் நடைபெறுகிறது. கொடியேற்றம் மீனாக்ஷிக்கு மட்டுமே நடை பெறும்.ஆவணி ஆவணி மாதம் மூலத் திருநாள், ஆவணி மூல உற்சவம் என்றே பெயர் பெற்றது. நான்கு ஆவணி வீதிகளிலும் அம்பாளும், சுந்தரேஸ்வரரும் வீதி உலா வருவார்கள். வளையல் திருவிளையாடல், பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல், நரியைப் பரியாக்கியது, விறகு விற்றல் போன்ற திருவிளையாடல்கள் நடைபெறும். மூல நக்ஷத்திரத்தன்று சுந்தரேஸ்வரருக்குப் பட்டாபிசேகம் நடைபெறுகிறது.புரட்டாசி புரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மீனாக்ஷி அலங்கரிக்கப்படுகிறார்.ஐப்பசி ஐப்பசி மாதப் பிரதமையிலே இருந்து சஷ்டி வரையிலும் கோலாட்ட உற்சவம்.கார்த்திகை கார்த்திகை மாதம் பத்து நாட்கள் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தில் அம்மன் சந்நதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நதியிலும் சொக்கப் பனை கொளுத்தப்படுகிறது.மார்கழி மார்கழி, தனுர் மாத வழக்கப் படி காலையில் சீக்கிரமே நடை திறந்து இரவு ஒன்பது மணிக்கு அர்த்த ஜாமம் முடிந்து விடுகின்றது. தினமும் வெள்ளியம்பல நடராஜர் சந்நதியில் மாணிக்க வாசகர் முன்பாக கோயிலின் ஆஸ்தான ஓதுவார்கள் திருவெம்பாவைப் பாடல்களைப் பாடிப்போற்றுவார்கள். அதிகாலை ஐந்தரை மணியில் இருந்தே இது நடக்கும். இதில் பத்து நாட்கள் எண்ணெய்க் காப்பு நடக்கும். இந்தப் பத்து நாட்களும் சுவாமியும், அம்பாளும் புறப்பாடு கிடையாது. மாணிக்கவாசகர் மட்டுமே புறப்பாடு காணுவார். பதினோராம் நாள் ரிஷபாரூடராய் அம்பாளோடு சுவாமி ஆடி வீதியில் வலம் வருகிறார்.தை தை மாதம். தெப்பத் திருநாள் நடக்கும். வண்டியூரில் திருமலை நாயக்கரால் தோண்டப்பட்ட தெப்பக் குளத்தில் வசந்த மண்டபத்தில் தெப்பம் கட்டி சுவாமியையும், அம்பாளையும் அதில் எழுந்தருளச் செய்து தெப்போற்சவம் நடைபெறுகிறது.மாசி மாசி, பங்குனி இந்த இரண்டு மாசத்துக்கும் சேர்த்து மண்டல உற்சவம் நடக்கிறது. இது கோயிலோடு நெருங்கிய தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நாற்பத்து எட்டு நாட்கள் நடக்கும் இந்த உற்சவம் கொஞ்சம் பெரியது என்றே சொல்லலாம்.பங்குனி பங்குனி உத்திரம், சாரதா நவராத்திரி இரண்டும் சேர்ந்து வரும் திருவிழா. பங்குனி மாதக் கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை அம்பாளும், சுவாமியும் வெள்ளியம்பலத்திலே அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார்கள். சுவாதி நட்சத்திரத்தன்று இருவரும் மகனின் திருமணக் கோலம் காண திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள். மேலும், இங்கு தினசரி பூஜைகள் செய்யப்படுவதுடன் சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகக் கருதப்படும் அனைத்து நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
சித்திரை தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டாலும், மதுரையில் தான் சித்ரா பௌர்ணமி விழா விசேஷமாக கருதப்படுகிறது. ஒருமுறை விருத்த்ராசுரன், விஸ்வரூபன் என்ற இருவரை தேவேந்திரன் கொன்றான். அவர்கள் பிறப்பால் அந்தணர்கள் ஆனதால் இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அதிலிருந்து விடுபட தன் குருவை நாடி உபாயம் கேட்டான். குருபகவான் அவனிடம் பூலோகம் சென்று பல்வேறு சிவஸ்தலங்களில் வழிபட்டால் ஓரிடத்தில் உன் தோஷம் நீங்கும் என்று கூறினார். அதன்படி இந்திரன் காசி முதலிய பல ஸ்தலங்களில் வழிபட்டு தெற்கு நோக்கி வந்தான். ஓரிடத்தில் கடம்ப மரத்தின் கீழ் சென்றவுடன் தன்னைப் பற்றியிருந்த தோஷம் விலகக் கண்டான். இந்திரன் மகிழ்ச்சியடைய அவன் முன் கடம்ப மரத்தடியில் சிவபெருமான் திருஆலவாய் சோமசுந்தரர் அவனுக்கு காட்சி கொடுத்தார். இந்திரன் சிவபெருமானுக்கு கோவில் கட்ட நினைத்து தேவலோகத்தில் இருந்து ஒரு விமானம் வரவழைத்தான். இத்தலத்து இறைவனுக்கு இந்திரன் விமானம் அமைத்ததால் அதற்கு இந்திர விமானம் என்றும், விண்ணில் இருந்து வந்ததால் விண்ணிழி விமானம் என்றும் சொல்லப்படுகிறது. ஆலயம் எடுத்த இந்திரனிடம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் என்னை இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். அதன்படி ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி நாளில் இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது. அதனால் தான் சித்ராபௌர்ணமி மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது.
மேலும் மதுரையானது சிறந்த சுற்றுலாத்தலமாகவும் செயற்பட்டு வருகின்றமை சிறப்பாகும். அந்தவகையில் நாயக்கர் காலத்தில் அமைக்கப்பட்ட இந்தோ-செராமிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் அரண்மனை இங்கே அமைந்துள்ளது. இது தவிர காந்தி அருங்காட்சியகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகமும் இங்கு உண்டு. ஆகவே மதுரையானது ஒரு பல்துறை சார் நகராக விளங்குகிறது என்பதில் சிறிதும் ஐயமில்லை.
மதுரை மண்கூட மல்லிகை வாசம் வீசும்...!