Oorpakkam Logo    

My Oor

 

 

தி.திருக்குமரன் - பால்யகால யாழ்ப்பாணமும் பறந்து சென்ற பருவமும்..‏

 

கல்லூரியால வெளிக்கிட்டு 15 வருசம் ஆகியும் இண்டைக்கும் யாரும் ஒண்டாப் படிச்ச பெடியளோட கதைக்கக் கிடைச்சா, மச்சி எங்களுக்கு ஆங்கிலம் படிப்பிச்ச Sir இப்ப என்ன செய்யுறார்?, அதிபர் பஞ்சலிங்கம் எங்க? அதிகாலை வீதி ஓட்டத்துக்கு பிறவுண்வீதியால் ஓடும் போது நண்பி ஒருத்தியின் வீட்டுக்கு முன்னால நிண்டு வா வெளியால எண்டு கத்தி விட்டு ஓடுவமே அவள் இப்ப  எங்க இருக்கிறாள்?, அந்த தள்ளாத வயசிலும் எங்களைத் துரத்தி வருகின்ற அவளின் அப்பா இன்னும் இருக்கிறாரா? இப்பிடித்தான் பால்ய காலத்தைச் சுற்றியே பேச்சு வரும், அதைப் பேசும் போது மனசில் ஏதோ இனம் புரியாத சந்தோசம்

 யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி வாழ்க்கை என்பது இந்தப் பிறப்பில் மீண்டும் பெற முடியாத ஓர் அழகிய காலம். அதை எல்லாம் இப்ப பள்ளி நண்பர்களுடன் பேச நேரம் கிடைச்சா, உள்ளங்கையில் இருந்தும் அடிவயிற்றில் இருந்தும் உதை பந்தாட்டத்தில் பனால்டி அடிக்கப் போகும் போது ஏறுகின்ற ஒரு வகையான மயக்கம் நிறைந்த மின்சார நீரலை என்னை அறியாமலேயே கிர்கிர்ரென ஏறும்,  அண்டைக்கு எங்களோட திரிஞ்ச பெடியள் எல்லாம் இப்ப கல்யாணம் கட்டி கதைக்கவும் நேரம் இல்லாம வேலை,குழந்தை,மனைவி எண்டு பிசி, நாங்க சைற் அடிச்சுத் திரிஞ்ச  பெட்டையள் எல்லாம் இப்ப எங்க இருக்கிறாளவை எண்டே தெரியாது, அவள் அவனைக் கல்யாணம் கட்டி 2 பிள்ளையோட அவுஸ்ரேலியாவில இருக்கிறாள், மற்றவள் கனடாவில எண்டு கேள்விப்பட்டனான், அவளுக்கும் 3 பிள்ளையாம், இப்பிடி  பெடியள் யாரும் எப்பாவது புதினம் சொன்னால் தான் உண்டு.

 காலம் கண் முன்னே மிக வேகமாக ஓடித்தான் போய் விட்டது, ஆனாலும் என்னைப் போல வேலை இல்லாத சிலர் இன்னும் அதை நினைச்சுப் பாப்பாங்கள் எண்டு நினைக்கிறன். காலம் எப்படித்தான் கரடு முரடான பாதைகளுக்குள்ளால் என்னை ஓட்டினாலும் சிலவற்றை என்றைக்கும் என்னால் நினைக்காமல் இருக்க முடிவதில்லை, என்ரை பள்ளி வாழ்க்கையில்  தினமும் நான் நிண்டு பெடியளோட அரட்டை அடிக்கிற முக்கியமான இடங்கள் எண்டைக்கும் மறக்க முடியாதவை. பிறவுண்வீதி, நீராவிப் பிள்ளையார் கோயிலடி, பொஸ்கோ பள்ளிக்கூட குளத்தடி, யாழ் இந்துக்கல்லூரி மைதான அரசமரத்தடி, நல்லூரடி, இப்பிடி நிறைய இடங்கள், இதுகளில எல்லாம் நாங்கள் நிண்டு செய்த அட்டகாசங்களைச் சொல்லுறதெண்டா ஒருவருசமாகும்.

  ஈசன், ஜெகன், பிரகலாதன், மதன் இப்பிடி ஒரு செற் எப்பவும் பிறவுண் வீதியில  இருக்கிற ஈசன் வீட்டு வாசலில தான் நிப்பம், அனேகமான பொம்பிளைப் பிள்ளையைப் பெத்தவங்கள் தங்கட பிள்ளையளை நாங்கள் நிக்கிற இடத்தைத் தாண்டி விட்டிட்டு, சரி பிள்ளை கண்டம் தாண்டியாச்சு இனி உனக்கு பிரச்சனை இல்லை போ எண்டு சொல்லீற்று திரும்புவாங்கள், எங்கட றோட்டிலையே இருந்த ரெண்டு பள்ளித் தோழிகளை நாங்கள் படுத்தின பாடிருக்கே இண்டைக்கும் அவளவைக்கு எங்களில செல்லக் கோபம் இருக்கலாம், உண்மையில நாங்கள் அப்படி செய்வதற்கு காரணம் அவளவைக்கு எங்களப்பாத்தா ஒரு நக்கல், ஆங்கிலம் வராது, படிப்பில மட்டம் எண்டதால ஒரு இளக்காரம், அதில ஒரு நண்பிக்கு அக்கா ஒரு ரைப்பான ஆள், கோவம் வந்தா தகப்பனுக்கும் அடி போடுவா, அந்த நாளில ராஜன் இசைக்குழு தான் பிரபலம், இரவிரவா நிகழ்ச்சி நடக்கும், நிகழ்ச்சி முடிஞ்சு அதிகாலை 2 மணிக்கு வீட்டை வருவம், வரும் வழியில் தான் நண்பிகளின் வீடு, அந்த நேரமும் அரிக்கன் லாம்பு எரிஞ்சு கொண்டிருக்கும் படிச்சுக் கொண்டிருப்பாளவை, எங்களுக்கு கடுப்பாயிடும், படிச்சது காணும் போய்ப்படு,  வெளியில வா  அப்பிடி இப்பிடி எண்டு கனக்க கத்துவம், நாங்கள் பெயர் சொல்லிக் கத்தாததால நண்பி வீட்டில பிரச்சனை, அவளின் அக்கா தனக்குத் தான் கத்திறம் எண்டு நினைச்சு சாமத்தில தகப்பனுக்கு அடி போட்டு எழுப்பி பெடியள் கத்துறாங்கள் நீ நித்திரையா கொள்ளுறாய், போ போய் பிடி எண்டு கலைக்க அந்தாள் பாவம் அந்த வயசில எங்களை கலைச்சுப் பிடிக்கேலுமே, மகளின்ரை நச்சரிப்பும், அச்சுறுத்தலும் தாங்காம ஆரெண்டு ஒரு மாதிரி விசாரிச்சுப் பிடிச்சு எங்களிட்டை வந்து, தம்பிமார் நான் சொன்னாப் போல நீங்க கேக்கப் போறேல்ல,  சின்னவளுக்குத் தானே கத்துறியள் பிறகேன் பொதுவாக் கத்துறியள், அவளின்ரை பெயரைச் சொல்லிக் கத்துங்கோ, நீங்க  வா வெளியில  எண்டு கத்தீற்று போக மூத்தவள் என்னை கத்தியால குத்த வாறாள் எண்டு தன்னுடைய பரிதாபமான நிலைமையை விளக்கினார், அதுக்குப் பிறகு நாங்கள் அந்தாளின்ரை சொல்லுக்கு மதிப்புக் குடுத்து பெருந்தன்மையுடன் பெயர் சொல்லித் தான் கத்துவம்.

 நாங்கள் ஈசன் வீட்டு வாசல்ல நிண்டு அதால போறவாற பெட்டையளுக்கு ஏதும் சொன்னா அவளவையின்ர தாய் தகப்பன் ஈசன் வீட்டை தான் முறைப்பாட்டுக்கு வருவினும், ஈசன் வீடு ஒரு அன்னதான மடம் மாதிரி, அங்க வந்து  சாப்பிடாத ஆக்களே இல்லையெண்டு சொல்லலாம், ஈசன்ரை அம்மாவின் நெத்தியில் உள்ள குங்குமம் வியர்வைக்கு வழிஞ்சு மூக்கு நுனியால சொட்டுச் சொட்டா விழ கண்ணாடியையும் உயர்த்தி உயர்த்தி விட்டபடி வாற எல்லாருக்கும் சமைச்சுப் போட்டுக் கொண்டு நிப்பா, எனக்குத் தெரிஞ்சு ஈசன்ரை அம்மா வாழ்க்கையில அதிக காலம் நிண்டது சமையற்கட்டில தான், ஈசன் வீட்டில சரியான நல்லபிள்ளை, அப்பாவி மாதிரியே எப்பவும் முகத்தை வச்சிருப்பான், அவன் பெட்டையளுக்கு நக்கல் அடிச்சான் எண்டு எவராவது சொன்னா அந்த ரோட்டில உள்ள யாருமே நம்ப மாட்டினும், இப்பிடி இருக்கேக்கை அதை அவன்ரை அம்மா எப்பிடி நம்புவா? அதால தன்ரை பிள்ளை கிண்ட்லடிச்சதா முறைப்பாடு செய்ய வரும் எல்லாருக்கும் என்ரை பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும், அவன் அப்பிடிப்பட்ட ஆளில்லை, வேணுமெண்டா ஊரில கேட்டுப் பாருங்கோ எண்டு  நல்ல பேச்சுக் கொடுத்து வந்த ஆக்களை திருப்பி அனுப்பீருவா,  இப்பவும் ஈசன் சரியான அப்பாவி எண்டு தான் அவ சொல்லுவா, ஈசன்ரை அப்பா ’ஜொலிரைப்’ எப்பவும் எங்கடை பக்கம்தான், பெடியளெண்டா இந்த வயசில இப்பிடித் தான்ரா இருக்கோணும் எண்டு சொல்லுவார், இதெல்லாம் எங்களுக்கு வசதியா இருந்ததால அந்த இடமே எங்களுக்கு spot ஆ போச்சு, 

இப்பிடி இருக்கேக்கை திடீரெண்டு ஒரு நாள் நாங்கள் இரவிரவா கத்திக் கிண்டல் பண்ணுற அந்த நண்பி இயக்கத்துக்கு போய்ற்றாள், அவள் மட்டுமில்ல O/L பரீட்சையில நல்ல பெறுபேறு எடுத்த  பல பிள்ளையள் இயக்கத்தில சேர்ந்திட்டுதுகள், ஊரெல்லாம் ஒரே பரபரப்பு, சேர்ந்த பிள்ளையளை எடுக்கிறதுக்காக தாய் தகப்பன் அங்காலும் இங்காலுமா ஓடித் திரியுதுகள், அதுகளோ நாங்கள் போனாப் போனதுதான் திரும்பி வர மாட்டம் எண்டு உறுதியா நிக்குதுகள், அப்ப எங்கடை வகுப்பெல்லாம் இவளவையப் பற்றித்தான் கதை,       சீ..இப்பிடி தேசப் பற்றுள்ள ஒருத்தியை திமிர்ப் பிடிச்சவள் எண்டு நினைச்சு தேவை இல்லாம நக்கல் அடிச்சுப் போட்டமே எண்ட கவலையும், இந்த வயசிலையே எங்கள் நண்பி ஒருத்தி தேசத்துக்காகப் போராட இயக்கத்துக்கு போய்ற்றாளே எண்ட பெருமையும் எங்கள் எல்லாருக்கும் இருந்தது, அப்ப நல்லூர்த் திருவிழாக் காலம், நான் ஈசன் நண்பர்கள் எல்லாரும் 25 நாள் விரதம் மட்டுமல்ல கோயிலைச் சுத்தி அங்கப்பிரதட்சணமும் அடிக்கிறது,உருளேக்கையும் யாரும் அங்கால இங்கால போறாளவையா எண்டு பாத்து ஏதும் சொல்லிக் கொண்டு தான் உருளுவம்

 அண்டைக்கு மாம்பழத்திருவிழா நாங்கள் அங்கப் பிரதட்சணம் பண்ணீற்று நல்லூர்த் தேரடியில உடம்பில் உள்ள மண் கொட்டுவதற்காக இருக்கிறம், இயக்கத்துக்குப் போன அந்த நண்பி அங்க நிண்டு பிடிக்க முடியாம திரும்பி ஓடி வந்திட்டாளாம் எண்டு செய்தி வரூது, நல்லூர்த் திருவிழா முடிஞ்சாப் பிறகு எப்பிடிப் பொழுது போக்கிறது எண்டு யோசிச்சுக் கொண்டிருந்த எங்கட வாய்க்கு அவல் மாதிரி  இந்தச் செய்தி  கிடைச்சுது, அத்தோட தன்னால ஏலாது வீட்டை போப் போறன் எண்டு பொறுப்பாளரிட்டை எப்பிடிச் கெஞ்சினாள் எண்டும் அங்க நிண்ட பெடியன் ஒருத்தன் எங்களுக்குச் சொல்லீற்றான், விருப்பம் இல்லாத ஆக்களை அப்ப இயக்கம் வச்சிருக்க விரும்புறேல்லை எண்ட படியா  அவளை போகச் சொல்லி விட்டிடுது, ஆனா நாங்க விடுறதா இல்லை,

இரவிரவா அவளின் வீட்டு மூலையில நிண்டு  பொறுப்பாளரிட்டை எப்பிடி அழுதாள் எண்டு அழுது காட்டுறது, நாடகம் மாதிரி அங்க நடந்ததை அவளுக்குக் கேக்கக் கூடிய மாதிரி நடிச்சு வாங்குவாங்கெண்டு அவளை வாங்கிக் கொண்டே இருந்தம். இது அவளுக்கு தன்மானப் பிரச்சனையாப் போச்சு, இவங்கள் இப்பிடியே எல்லா இடமும் நக்கல் அடிச்சா நான் திரும்ப இயக்கத்துக்கு போயிருவன் எண்டு அவள் தகப்பனுக்கு அழுத்தம் கொடுக்க வேறு வழி இல்லாம அவர் கொஞ்சம் இறுக்கமான மொழியில எங்களோட பேசினார், சரி ஐயா  இனி எதுவும் நக்கல் அடிக்க மாட்டம் எண்டு நாங்களும் சொல்லி அனுப்பீற்றம், அடுத்த நாள் நல்லூர் அங்கப் பிரத்ட்சணம் முடிஞ்சு சால்வையையும் போத்துக் கொண்டு வாறம் இவள் வீட்டு வாசல்ல நிக்கிறாள், இவளைக் கண்டா சிரிப்பு வந்திடும், நாங்கள் சிரிச்சா அது பெரிய பிரச்சனை ஆகிடும் எண்ட படியா முன்னால மோதினாலும் பரவாயில்லை எண்டு முகத்தை சால்வையால மூடிக் கொண்டு அவள் நிண்ட இடத்தைக் கடந்திட்டம், ஆனா அது தான் பெரிய பிரச்சனையாப் போச்சு, நாங்கள் முகத்தை மூடி முக்காடு போட்டதை அவள் தன்னை நக்கல் அடிக்கத் தான் அப்பிடி சிம்பொலிக்காச் செய்யிறம் எண்டு நினைச்சு தகப்பனிட்டைப் போய் திரும்பி அழ,  இனி இவங்களோட கதைச்சு வேலை இல்லையெண்டு அந்த மனுசன் நேர ஈசன்ரை அம்மாட்டை வந்து உங்கடை மகனும் நண்பனுமாச் சேந்து என்ரை மகளை முக்காடு போட்டுக் கிண்டலடிக்கிறாங்கள், இனியும் என்னால பொறுத்துக் கொண்டு இருக்கேலாதெண்டு கெம்பீற்றார், ஈசன் வழமை போலவே நாங்கள் அவளை நக்கல் அடிக்க அப்பிடிச் செய்யேல்ல வெய்யிலுக்காகத்தான் போட்டனாங்கள் எண்டு அடிச்சுச் சொல்லீற்றான், இவ்வளவும் காணாதா ஈசன்ரை அம்மாக்கு, என்ரை பிள்ளை அப்பிடி இல்லை, சும்மா கற்பனை பண்ணாதீங்கோ எண்டு தாறுமாறா ஆங்கிலத்திலும் நல்ல திட்டுக் கொடுத்து அவரை திருப்பி அனுப்பீற்றா.  யார் வந்து என்ன சொன்னாலும் எங்களை நம்பி,  முறைப்பாட்டுக்கு வாற ஆக்களோட சண்டை போட ஈசன்ரை அம்மா இருந்த படியா நாங்கள் எல்லாத்திலும் தப்பிக் கொண்டு வந்தம்.

 அதில நிக்கிற எல்லாப் பெடியளுக்கும் உள்ள ஒற்றுமை என்னெண்டா எல்லாருமே வகுப்பில கடைசிப்பிள்ளை அல்லது கடைசிக்கு முதல். அதுவும் ஆங்கிலப் பாடம் எண்டா சொல்லி வேலை இல்லை, ஆறாம் வகுப்பில ஆங்கிலப் பாடத்துக்கு வாங்கின 40 ஒற்றைக் கொப்பியை 11 வகுப்பு முடியு மட்டும் முடியாம பயன்படுத்தின ஆக்கள். வெளிநாடுகளுக்கு வந்தும் இப்பவும் பெரிய திறமெண்டில்லை, கொஞ்சம் சொல்லுகளைச் சேர்த்து வெள்ளைக்கு விளங்கியும் விளங்காமலும் இருக்கிற மாதிரி கதைக்கப் பழகி இருக்கிறம். அவ்வளவு தான்

 எங்களுக்கையே  மதன் தான் மிகவும் சுவாரசியமான ஆள், அதாவது  இப்ப வாற பவர்ஸ்ரார் மாதிரி, உடம்மை கட்டுக் கோப்பா வச்சிருக்க வேணும் எண்டா இயற்கை மருந்துகள் தான் எப்பவும் பாவிக்க வேணும் எண்டு சொல்லி, காய்ச்சலுக்கு குடிக்க எண்டு வீட்டில வேப்ப மரப்பட்டை அவிச்சு வச்சிருப்பான், அவனை தண்ணி எடுத்துக் கொண்டு வா எண்டு சமையல் அறைக்குள் அனுப்பி விட்டு, வேப்பம் பட்டை நீருக்குள்ள  நாங்கள் எல்லாம் சேர்ந்து  மூச்சா அடிச்சு வைப்பம், அவனுக்கும் எதுவும் வித்தியாசம் தெரியாது, பட்டை குடிக்கிற நேரம் ஆச்செண்டு சொல்லி  எல்லாற்றை மூச்சாவையும்  ஒரே மிடறில குடிச்சிட்டு ஹா எண்டு நாக்கால சொண்டைத் தடவுவான், காலமை அவிச்ச வேப்பம் பட்டை  இன்னும் இளஞ்சூடாவே இருக்கு அது தான் மூலிகையின் விசேசம் எண்டும் சொல்லுவான். எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியாம கண்ணால எல்லாம் தண்ணி ஓடும். அப்ப ஏதும் சொன்னா மிச்சத்தை குடிக்காம ஊத்திப் போடுவான் எண்ட படியாலும் அடி விழும் எண்ட தாலும் ஒரு மாதிரி சிரிப்பை அடக்குவம், சில ஆண்டுகளின் பிறகு அவன் எங்களோட ஏதும் வாக்குவாதப்பட்டானெண்டா, டேய்! எங்கட மூச்சா குடிச்சு வளர்ந்தவன் தானே நீ, கனக்க கதைக்காதை எண்டு கேலி செய்யாமல் விடுவதில்லை, இப்ப அவன் காதலியோட கனடாவில படு பிசியா இருக்கிறானாம், இன்னும் அதே கதை தானாம், விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் தான் சொன்னபடி செய்திருந்தா போராட்டம் தோற்றிருக்காதெண்டு எங்கையும் விருந்துகளில ஆக்கள் அம்பிட்டா சொல்லுவானாம்.

யாழ்ப்பாணத்தில இருக்கும் மட்டும் காதல்கீதல் எதுவும் இல்லாம இருந்த ஈசனும்  கொழும்புக்குப் போய் சாடையா என்னவோ காதல் வயப்பட்டதாவும் இடையில அது உடைஞ்சு போனதாவும் அறிஞ்சன், அந்த நேரத்தில புட்டுத் திண்ட பூனை மாதிரி முழுசி முழுசி ஈசன் வீட்டை வாற அவன்ரை மச்சாள்  பிறகு என்னவோ மாதிரி பேசி அவனை மடக்கி கல்யாணம் முடிச்சு கனடாவுக்கு கூட்டிக் கொண்டு போய்ற்றாள். அதுக்குப் பிறகு  அவனோடும்  தொடர்பு கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு போச்சு,

 இந்த செற்றிலையே காதலிக்கிறதெண்டாலும் சரி காதலிக்கிற ஆக்களுக்கு அறிவுரை, காதல் கடிதம் எழுதிறதெண்டாலும் சரி நான் தான் expert, என்ரை அறிவுரையாலும், கடிதங்களாலும் பல காதல்கள் கை கூடியதால் அதைக் கேள்விப்பட்டு தூரத்தில இருந்தெல்லாம் பெடியள் கடிதம் எழுத என்ரை வீட்டை வருவாங்கள். இதுக்காக ஒரு அலுவலகம் திறந்தா என்ன மச்சான் எண்டு கூட என் பள்ளித் தோழன் ராஜேஸ் என்னிடம் கேட்டிருக்கிறான். ஆனா என்ரை காதல் கதையோ சந்தி சிரியாச் சிரிச்சுது, பெட்டை இருந்தது அரியாலையில, நான் இருந்தது 6 மைல் தள்ளி பிறவுண் ரோட்டில, காலமை 7 மணிக்கு அவள் பக்கத்தில உள்ள ரியூசனுக்கு போகேக்கை இங்கை இருந்து சைக்கிளை நெஞ்செரிய உழக்கிக் கொண்டு போய் பாக்கிறதெண்டா 30 நிமிசம் ஆகும், இதுக்காக வீட்டை பொய் சொல்லீற்றும் என்ரை ரியூசனை தியாகம் பண்ணீற்றும் போக வேண்டி இருந்துது, இப்பிடி மூச்சிரைக்க ஓடிப் போயும் பெரிசா ஒண்டும் கிழிக்கிறதில்லை, சும்மா அவள் வாற றோட்டில  100 மீற்றருக்கு அங்கால நிண்டு அவள் போறதைப் பாத்திட்டு, திரும்ப 30 நிமிசம் சைக்கிள் உழக்கி காலங்காத்தாலையே களைச்சுப் போய் வீட்டை வந்து படுக்கிறது, நம்ம பிள்ளை படிச்சு களைச்சுப் போய் வாறான் எண்டு நினைச்சு அம்மாவும் முட்டைக் கோப்பி அடிச்சு வச்சிருக்கும்.

நம்மைப் போல இல்லாம கமுக்கமா காரியத்தை முடிக்கிற பெடி பெட்டையளும் அப்பவே இருந்தாலும் அந்த நாளில் யாழ்ப்பாணக் காதல் என்பது பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது,  நாலைஞ்சு பெடியள் சேர்ந்து நிண்டு அவள் வரும் பாதையில குறிப்பா பொஸ்கொ குளத்தடியில மரங்களுக்குள் ஒழிச்சு நிண்டு பட்டம் கத்துறது, அவள் அந்த இடத்தைத் தாண்டிப் போன பிறகு நல்லா இடைவெளி விட்டு பின்னாலையே போய் அவள் வீட்டில போய் இறங்க கடைக்கண்ணால அவள் படலையைப் பாத்தபடி தாண்டிப் போறது, இப்பிடியே ஒரு ரெண்டு வருசம் ஓடிப் போச்சு, பத்து வருசத்துக்கு பிறகு அண்மையில யாழ்ப்பாணம் போன என் நண்பி ஒருத்தி யாழ் இந்துக்கல்லூரி மைதான வீதி்யைக் கடக்கும் போது, அந்த நாட்களில் மைதானத்துக்குள் நின்று கொண்டு தன்னை  நக்கல் அடிச்சு நான் கத்துறது தான் ஞாபகம் வந்ததெண்டும் அப்ப அது தனக்கு கோபமா இருந்தாலும் இப்ப நிண்டு கத்துறதுக்கு நீயில்லாம மைதானம் வெறிச்சுப் போய்க் கிடக்கிறதப் பாக்க  மனசுக்கு ஏதோ ஒருமாதிரியாய் இருந்ததடா எண்டும் சொன்னாள்.

 

 

 

 எல்லாற்ற காதலுக்கும் மதி உரைஞராக இருந்த என்னால் என் காதலை எப்படிக் கையாள்வது என்று தெரியவில்லை, ஆனா நான் அவளை விரும்புறன் எண்ட கதை எங்கட வகுப்பு மட்டத்தில யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லாப் பள்ளிக்கும் பரவி இருந்தது. பின்னுக்குத் திரிஞ்ச அந்த ரெண்டு வருசத்திலும் ஒரு நாள் கூட துணிவாய் அவள் பக்கத்தில போய் நான் எதுவும் கதைச்சதில்லை, அதுக்குக் ஒரு காரணம் அவளோட வாற ரெண்டு நண்பிகள், நாங்கள் கறுப்பி எண்டு தான் அவையை எங்களுக்குள்ள சொல்லுவம், அவர்கள் இப்ப வெளிநாட்டுக்கு வந்து பனிக்குளிருக்கு சாடையான வெள்ளையாக வேறு வந்து விட்டார்கள் என்றும் கேள்வி,அத்துடன்  அவர்கள் இப்போது  என்னுடைய நல்ல நண்பிகளும் கூட,  ஆனால் அப்ப அவர்கள் தான் என் காதலுக்கு வில்லிகளாக இருந்தார்கள், இப்படியே பின்னால திரிஞ்சு நாலுவருசம் ஆகுது, அதுக்குள்ள ஏழெட்டு சைக்கிள் ரயரும் தேஞ்சு மாத்தியாச்சு, இன்னும் கதைக்கவே இல்லை, கதைப்பம் எண்டு மனசை திடப்படுத்திக்கொண்டு போனா அவளுக்கு கதைக்க விருப்பமோ இல்லையோ அவளவை விட மாட்டாளவை, அவளுக்கு உங்களைப் பிடிக்கேல்லை, தேவை இல்லாம நேரத்தை வீணடிக்காமப் போங்கோ எண்டு சத்தம் போடுவாளவை, கடவுளுக்கு விருப்பமெண்டாலும் குருக்கள் விட மாட்டார் போல இருக்கே, அவளவை வராத நாளாப்பாத்துப் பேசுவம் எண்டு காத்திருந்து காத்திருந்து ஒரு நாள் எப்பிடியோ அவள் தனியப் போகேக்கை மூச்சை இழுத்துப் பிடிச்சுக் கொண்டு வேர்த்தொழுக ஒழுக பின்னால போறன், அவள் திரும்பித் திரும்பிப் பாக்கிறாள், சைக்கிளை சிலோ பண்ணுறாள், நானும் சிலோ பண்ணுறன், இது வேலைக்காகாதெண்டு நினைச்சிருப்பாள் போல சடாரெண்டு அந்த லொடலொட நீலச்சைக்கிளை விட்டு இறங்கி ஸ்ராண்டைப் போட்டிட்டு இங்க வா எண்டு சொல்வது போல்  கண்ணால கூப்பிட்டாள், நெஞ்சு படபடெண்டு அடிக்க பயந்தபடி இறங்கி சைக்கிளை மெதுவாக அவள் பக்கத்தில் உருட்டிக் கொண்டு போனன், கான்டிலைப் பிடிச்சிருந்த என்ரை கை கடகடெண்டு நடுங்குது, சாதாரணமாகவே அவள் முகம் ஒரு குழந்தை போல எப்பவும் ஒரே மாதிரியே இருக்கும், அண்டைக்கு இன்னும் தெளிவாப் பேசினாள், நானும் பல வருசமாப் பாக்கிறன் எங்கையோ தூரத்தில பின்னால வாறீங்கள், பெடியளை விட்டு பட்டம் கத்துறீங்கள், ஒரு நாளாவது கிட்ட வந்து பேசுவீங்கள் என்ரை முடிவைச் சொல்லலாம் எண்டு பாத்தா நீங்கள் சரிப்பட்டு வாற மாதிரியே தெரியேல்லை, இப்பிடியே விட்டா இன்னும் அஞ்சாறு வருசத்துக்கு இப்பிடியே திரிவியள், அது தான் நானே நிண்டனான், பரீட்சைக்கு இன்னும் ரெண்டு மாசம் தான் கிடக்கு இதென்ன விளையாட்டு, எனக்கிந்த காதல் கத்தரிக்காய் எல்லாம் சரிவராது வீட்டில சொல்லுற படிதான் செய்வன், மருத்துவரா வரோணும் எண்டது தான் என்ரை ஆசை, அதுக்குப் பிறகு தான் மிச்சம் எல்லாம், இனியும் எனக்குப் பின்னால வந்து உங்கட நேரத்தை வீணாக்க வேண்டாம், போங்கோ போய்ப் படிக்கிற வழியைப் பாருங்கோ, எந்த சலனமும் அற்ற குரலால் படபடென்று பேசி முடித்தாள், திரும்பி ஏதாவது காதல் வார்த்தை பேசி அவளை சமாளிப்பம் எண்டா தொண்டை எங்கை விட்டுது, கப்பிப்போய் வெறும் காத்துத் தான் வந்துது, பெருமாள் கோயில் மாடுமாதிரி அவள் சொன்ன எல்லாத்துக்கும் சரி சரி எண்டு தலையாட்டிப் போட்டு வந்தது தான், அதுக்குப் பிறகு அவளுக்குப் பின்னால போறேல்லை, அவளோட கதைச்சிட்டு, எங்கை கதைச்சிட்டு! அவள் சொன்னதைக் கேட்டிட்டு வீட்டை வர வழியிலையே குலைப்பன் காய்ச்சல் அடிக்கத் தொடங்கீற்றுது, அஞ்சு நாளா செமக்காய்ச்சல் எழும்பவே இல்லை,

 எத்தினை பெடியளுக்காக பெட்டையளின்ரை சைக்கிள் கான்டில பிடிச்சு நடு ரோட்டில நிப்பாட்டி துணிவா அவனுக்கு முடிவைச் சொல்லீற்றுப் போ எண்டு சொல்லி இருப்பன், உங்கட மகளை இவன் விரும்புறான் மகளிட்டை முடிவைக் கேட்டுச் சொல்லுங்கோ எண்டு யாரோ ஒரு பெட்டையின் தாயிடம் கூட ,அவ அப்பாவோட அலுவலகத்தில வேலை செய்யிறவ எண்டு தெரியாம வீட்டுக்கே நேராப் போய்  முடிவு கேட்டிருப்பன், (அதை அவ அப்பாட்டை மெதுவா காதில போட செய்தி வீட்டுக்கு வந்து இந்த வயசிலையே பொம்பிளை கேட்டுப் போறானாம் எண்டு சொல்லி அப்பா ரெண்டு பூவரம் கதியால் தும்பாகும் அளவுக்கு சுத்தும் பித்தும் சுழரச் சுழர அடிச்சவர் எண்டது வேறை விசயம்) அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஒரு நிலையா, என்னாலும் என் திறமையில் நம்பிக்கை வைத்த நண்பர்களாலும் அப்போதில் அதை நம்ப முடியவில்லை.

அவள் திடீரெண்டு என்னைக் கூப்பிட்டுக் கதைச்ச பயத்தில காய்ச்சல் குளிர் காய்ச்சல் ஆக்கி எல்லா மருத்துவரிட்டையும் கொண்டு போய்க் காட்டியும் மாறாம இருக்க, அம்மாவும் என்ன செய்யிறதெண்டு தெரியாம பிள்ளைக்கு நாவூறு பட்டிட்டுது எண்டு சொல்லி வேப்பமிலை அடிச்சு நெருப்புக்குள்ள உப்பும் மிளகாயும் போட்டு என்னைத் துப்பச் சொல்லி சுத்திப் போட்டு ஒரு மாதிரி 10 நாளுக்கு பிறகு மெதுவா எழும்பீற்றன்,

 பிறகு நாட்டுப் பிரச்சனைகளும் தொடங்கீற்றுது, அது எப்பவோ தொடங்கி இருந்தாலும் அப்பதான் சரியாப் புரிய ஆரம்பிச்சுது. அதோட, சேர்ந்த கூட்டுகளாலை அதில நாட்டம் ஏற்பட்டு மெதுமெதுவா நானும் அதில ஈடுபடத் தொடங்க இங்கால உள்ள ஈர்ப்பு குறைஞ்சு போச்சு, பிறகு நானும் படிப்பு, வேலை எண்டு கொழும்போடை போய்ற்றன், அதுக்குப் பிறகு அவளைக் காணக்கிடைக்கேல்ல, அவள் அண்டைக்குச் சொன்னது போலவே மருத்துவராகீற்றாள் எண்டும், காதல் பிடிக்காதெண்டு எனக்கன்று சொன்னவள் பிறகு தன்னோடு பல்கலையில் படித்த என்னுடைய நண்பன் (மருத்துவர்) ஒருவனையே காதலிச்சு கல்யாணம் முடிச்சதாகவும்  நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டன்,  அவளின் நண்பிகள் இருவரும் கல்யாணம் முடிச்சு பிள்ளைகுட்டி எண்டு இப்ப வெளி நாட்டில செட்டில் ஆகீட்டினும்,எனக்கும் இதுக்குள்ள கல்யாணம் ஆகி நாலுவயசில இப்ப ஒரு ’கடுவன் குட்டியும்’  இருக்கிறான். அதன் பிறகு என்னுடைய சில செயற்பாடுகளால் வாழ்க்கையில் என்னென்னவோ எல்லாம் நடந்து உயிர்தப்பி  நானும் நாட்டை விட்டு  வெளியேறீற்றன், 

 வயசும் ஏறுது, தலையில எல்லாம் முடி கொட்டி மொட்டையாப் போச்சு, தாடியும் மெதுவா நரைக்கத் தொடங்கீற்றுது, நான் இன்னும் வாழ்வே தொடங்கேல்லை ஆனா காலம் அதைப் பற்றிக் கவலைப்படாம  சரியான வேகமாக ஓடிக் கொண்டிருக்குது

 ஒண்டா அண்டைக்க்கு திரிஞ்சவங்கள் எல்லாம் இப்ப எந்தத் தொடர்புமே இல்லாம  எங்கெங்கையோ சிதறிக் கிடக்குறாங்கள், சிலர் போர்க்களத்தில வீரச்சாவடைஞ்சும் போனாங்கள். இப்பிடியே கண்ணுக்கு முன்னால  எல்லாம் நடந்து கொண்டு போகுது,  இதுக்குள்ள அவளின்ரை ஞாபகம் எப்பவாவது இருந்திற்று வரும், வாறதே தெரியாம போயிடும், கனவில கூட நினைச்சுப் பாக்க முடியாத, இன்னும் என்னால நம்ப முடியாத என்னென்னவோ எல்லாம் நாட்டிலையும் நடந்து போச்சு,  நானும் என்னவோ அடிக்கிற காத்தில் பறக்கிற பஞ்சாய் வாழ்ந்து கொண்டு போறன். என்ன செய்யுறது What ever happens Life has to go on know..

 

தி.திருக்குமரன்

தேவையான பொருட்கள் : அன்னாசி ...

தேவையான பொருட்கள்: ரவை - 1 கப் ...

தேவையான பொருட்கள்: கடலைமா - 3கப்சீனி ...

வெங்கடபுரம் எனும் கிராமத்தில் ...

கிரேக்க நாகரீகத்தின் தோற்றமே மெய்யியலின் வளர்ச்சி எந்த நாகரீகத்ற்கும் அதனுடைய ...

 மனித அறிவுக்கலாசாரத்தின் முக்கிய பகுதி மெய்யியலையும், விஞ்ஞானத்தையும் உள்ளடக்கியுள்ளது.மெய்யியலானது ...

எங்கள் வானில் விமானங்கள் எந்த நேரமும் வந்து குண்டு மழை பொழியும், பலாலி இராணுவ ...

  கல்லூரியால வெளிக்கிட்டு ...

- முத்துக்குமார்   இந்த 35 வருட வாழ்க்கை பயணத்தில் சின்னதும் பெரியதுமாய் எத்தனையோ ...

நெல்லை : உன்னங்குளம் கிராமத்தில்  ...

மதுரை : தேனி மாவட்டத்தில் வைகை ...

குலசேகரம் : குலசேகரம் அருகே ...

எமது இணையத்தளத்தின் அன்பர்கள் ...

2007 ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் ...

வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் ...

காணொளி